நாகப்பட்டினம் மாவட்டம் காரியாபட்டினம் செட்டிபுலம் கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி நீலாவதி (வயது30). இவர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் நீலாவதி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மகளுடன் தங்கி உள்ளார். தனிமையில் மகளுடன் வசிக்கும் நீலாவதி வீட்டிற்கு மணமேல்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் கோட்டைப்பட்டினம் அருண்பாண்டியன் ஆகியோர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். நீலாவதி தனது மகள் கனிஷினியை பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளார். இன்று (10.09.2024) காலை அருண்பாண்டியன் கனிஷினியை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். நீலாவதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாலை வரை சிறுமி பள்ளியில் இருந்து வீடு வரவில்லை. அவரது அம்மாவையும் வெளியில் காணவில்லையே என்று அக்கம் பக்கத்தினர் நீலாவதி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கே நீலாவதி கழுத்தில் சேலை சுற்றி தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மணமேல்குடி போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் நீலாவதி இறந்து கிடந்ததைப் பார்த்து அவரது மகள் கனிஷினி எங்கே என விசாரித்துள்ளனர். காலையில் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறியதையடுத்து பொன்னகரம் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்த போது மதியம் உணவு இடைவேளை நேரத்தில் ஒருவர் வந்து பெற்றோர் எனச் சொல்லி மாணவியை அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளனர்.
அதன் பிறகு பள்ளியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்த போலிசார் கனிஷினியை நீலாவதி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு நபர் தான் அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கனிஷினியையும் அவரை அழைத்துச் சென்றவரையும் தேடி வருகின்றனர். நீலாவதி காயங்களுடன் சேலையால் இறுக்கப்பட்டு இறந்து கிடக்கும் நிலையில் சிறுமியின் நிலை என்ன ஆனது என்று போலிசார் தீவிரமாகத் தேடத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் மணமேல்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அரசுப் பள்ளி நிர்வாகம் பெற்றோர் அல்லாத நபரிடம் எப்படி மாணவியை அனுப்பி வைத்தனர்.? பெற்றோர் அல்லாத நபர் வந்துள்ளாரே அவருடன் மாணவியை அனுப்பலாமா என்று பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் கேட்டார்களா? என்பன போன்ற பல கேள்விகளைப் பொதுமக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர். கல்வித்துறை இது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பி்ல் கோரிக்கையும் எழுந்துள்ளது.