![Muslim who gifted a photo of Mecca and Medina to Annamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/r9V05_ZL-j2xRFSBPOoRER8C6_nU8xypJpyL0SSPz3g/1691056341/sites/default/files/inline-images/994_148.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று திருமயம், அறந்தாங்கி தொகுதி சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் இன்று ஆலங்குடி தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நடைபெற்றது. இரவு தங்கி இருந்த கடியாபட்டியில் இருந்து அறந்தாங்கி, ராஜேந்திரபுரம், ஆவணத்தான்கோட்டை, கீரமங்கலம், கைகாட்டி, மாங்காடு, வடகாடு வழியாக ஆலங்குடி செல்லும் வழித்தடம் என்று சொன்னதால் பாஜக தொண்டர்கள் வழி நெடுகிலும் கொடி, தோரணங்கள் கட்டி வரவேற்பு பதாகை வைத்திருந்தனர். ஆனால் உட்கட்சி விவகாரத்தால் வழித்தடத்தை மாற்றியதால் ஆலங்குடி கிழக்கு பகுதி பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந்து ஏமாற்றப்பட்டதாக கூறி சென்றனர்.
ஆலங்குடி மங்களாபுரம் அரிமளம் விளக்குப் பகுதியில் நடைப்பயணத்தைத் தொடங்கிய அண்ணாமலை, அம்புலி ஆற்றுப் பாலம், சந்தைப்பேட்டை, வடகாடு முக்கம், அரசமரம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடந்து சென்று காமராஜர் சிலை அருகே வாகனத்தில் ஏறி உரையாற்றினார். இந்தப் பாத யாத்திரையின் போது அம்புலி ஆற்றுப் பாலத்தின் அருகே பா.ஜ.க வைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் அண்ணாமலைக்கு அரபு எழுத்துகளால் அமைந்த புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.
மேலும் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர் ஒருவர் தக்காளி மாலை அணிவிக்க முயன்ற போது, அண்ணாமலை அந்த மாலையை வீணாக்கி விடாமல் யாரிடமாவது கொடுத்து பயன்படுத்தச் சொல்லுங்கள் என்று சொல்ல கூட்டத்தில் இருந்த ஒரு மூதாட்டியிடம் தக்காளிப் பழ மாலையைக் கொடுத்தனர். மேலும், ஆலங்குடியைச் சேர்ந்த உறவினர்கள் இல்லாத, வசதி இல்லாதவர்கள் என ஏழை எளியோருக்கு 55 ஆண்டுகளாக சுமார் 10,023 உடல்களை தனது காரில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்துள்ள சமூக ஆர்வலரான 515 கணேசனின் இரும்புக் கடைக்குச் சென்ற அண்ணாமலை அவரிடம் வாழ்த்துப் பெற்றதோடு, அவருக்கு தேவையான உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தார்.