ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் உள்ளார் முருகன். இவரிடம்மிருந்து கடந்த மாதத்துக்கு முன் மாதம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை சார்பில் பாகாயம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சிறைவிதிகளை மீறினார் என முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்தது சிறைத்துறை. இதில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை 15 நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம். விதிகளை மீறினார் என சந்திக்கும் வாய்ப்பை நிறுத்தியது சிறைத்துறை. அதோடு, அவரை தனிமைச்சிறையில் வைத்தது. தனக்கு சிறையில் பாதுகாப்பில்லை, அதனால் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நவம்பர் 11ந்தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார் முருகன்.
முருகன் சார்பில், சிறை விதிகளை மீறினார் எனச்சொல்லி உறவினர்களை கூட முருகனை சந்திக்க விடுவதில்லை என மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்பு விதிகளை அமல்படுத்துங்கள், இப்போது அவருக்கான சலுகைகளை வழங்குகங்கள் என நவம்பர் 14ந்தேதி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அந்த உத்தரவு சிறையில் உண்ணாவிரதம் இருந்த முருகனுக்கு நவம்பர் 15ந்தேதி காலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை திரும்ப பெற்றுக்கொண்டு உணவு உண்ண தொடங்கியுள்ளார் என வேலூர் சிறைத்துறை தரப்பில் இருந்து தகவல் கூறியுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதமிருந்த முருகன், அதனை திரும்ப பெற்றார். அவரின் பிரதான கோரிக்கை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்பது. அதுப்பற்றி சிறைத்துறை என்ன முடிவெடுக்கவுள்ளது என்பது இதுவரை தெரியவில்லை.