உணவுப்பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தும் பட்சத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தொடர்ந்து விலையில்லா அரிசி கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழுக்கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை (அக். 17) நடந்தது. பொதுச்செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மோகன், சீனிவாசன், தனகோட்டி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழை மக்கள் விலையில்லா அரிசியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உணவுப்பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் பட்சத்தில், மக்களுக்கு தொடர்ந்து விலையில்லா அரிசி கிடைக்காத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறுதொழில் முதல் பெருந்தொழில் வரை பாதிப்படைந்துள்ளது. பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர். நீட் தேர்வு பயிற்சி மையங்களில் நடக்கும் முறைகேடுகள் உயர் அதிகாரிகள் அனுமதியில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களை தரம் தாழ்த்திப் பேசுவதும், தனிநபர் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. இத்தகைய செயலை பாஜக அணியில் இருப்பவர்கள் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாயில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளதாக முதல்வர் கூறி வருகிறார். தூர்வாரிய குளத்தை நாங்கள் பார்க்கச் சென்றோம். அப்போது அதுபோன்ற திட்டங்களே நடக்கவில்லை தெரிய வந்தது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைப்பற்றி கவலைப்படாமல் தமிழக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கொள்ளையர்கள் அச்சமின்றி கொள்ளையடித்து வருகின்றனர். ராஜிவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற பேசும்போது, அவர் உணர்ச்சிவசப்படக்கூடாது. இது 7 பேரின் விடுதலைக்கு இடையூறாக அமைந்து விடும். நடக்க இருக்கின்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. பாஜக ஆட்சியில் இருக்கும் வரை ப.சிதம்பரத்தை வெளியே விடாமல் அவரை மீண்டும் கைது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சியாக பாஜக செயல்படுவது மட்டுமில்லாது, சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.