![More than ten villagers affected by rain floods](http://image.nakkheeran.in/cdn/farfuture/h-8mS1QAHqcR-xbchUckq1fRFWl_W-1bStDRxuIZy6Q/1636196673/sites/default/files/inline-images/marakkanam-bridge.jpg)
தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உப்புக்கு பெயர் போன மரக்காணம் பகுதியில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு மரக்காணம் அருகே உள்ள காரணி பட்டு - மண்டகப்பட்டு இரு ஊர்களுக்கு இடையே ஓடும் ஓங்கூர் ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் கட்டப்பட்டது. தற்போதைய மழையில் அந்த தரைப்பாலம் மூழ்கி இரு கரையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள காணிமேடு மண்டகப்பட்டு வெள்ளகுண்டகரம், புதுப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 15 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு தங்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க நகரங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகை கொண்டாடும் இந்த நேரத்தில் நகரங்களுக்கு சென்று பட்டாசுகள். துணிமணி, இனிப்பு வகைகள் வாங்கி வருவதற்கு பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். எனவே ஓங்கூர் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தரைப் பாலத்தை உயர் மட்ட மேம்பாலம் ஆக கட்ட வேண்டுமென அப்பகுதி கிராம பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் நேரிலும், கடிதம் மூலமும் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். ஆனால் அதுகுறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.