புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வேந்தன்பட்டி ஆறுமுகம் மனைவி சிகப்பி ஆச்சி (76). இவர்களது மகன் பழனியப்பன் (54) கட்டட பொறியாளர். இவரது மனைவி உஷா கரூரில் கல்லூரி பேராசிரியராக உள்ளார். தாய் சிகப்பி ஒரு வீட்டிலும் மகன் பழனியப்பன் ஒரு வீட்டிலுமாக வசிக்கின்றனர். 200 மீ தூரத்தில் இரு வீடுகளும் உள்ளது. வயதான தன் தாயாருக்கு பழனியப்பன் சாப்பாடு கொண்டு வந்து தினசரி கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல தாய்க்கு உணவு கொண்டு வந்த பழனியப்பன் தனது வீட்டிற்குத் திரும்பவில்லை. சிகப்பி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிகப்பி மற்றும் பழனியப்பனை தாக்கி கொலை செய்து அவர்களிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு பழனியப்பனிடம் இருந்த மற்றொரு வீட்டுச் சாவியை எடுத்துச் சென்று அந்த வீட்டையும் திறந்து அங்கிருந்த பெட்டிகளைத் திறந்து பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கவனித்த கொள்ளை கும்பல் தங்கள் செயல்பாடுகள் அத்தனையும் கேமாரா காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் கேமராவில் பதிவாகும் ஹார்ட் டிஸ்குகளை செட்டாக கழற்றிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட போலீசார் முதல்கட்ட விசாரணைக்காக 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். தடய அறிவியல் சோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. நகை, பணத்திற்காக தாய், மகனைக் கொன்ற சம்பவத்தால் பொன்னமராவதியே பரபரப்பாக காட்சியளிக்கிறது. கட்டட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள், பொறியாளர் பழனியப்பன் மற்றும் அவரது தாயாரை படுகொலை செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.