நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.