மோடி மான்கி பாத்தில் ஒன்று பேசுகிறார் வெளியில் நேர் எதிராக பேசுகிறார் என காவிரி நீர் பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுசெயலாளர் காவிரி ரெங்கநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை தமிழக விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் மூன்று போக விவசாயம் சுருங்கி கழுதை தேய்ந்து கட்டை எறும்பு ஆன கதையாக ஒரு போகத்திற்கே வழியில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் குவிண்டாலுக்கு 1750 மற்றும் 1770 என்று நீர்ணயித்துள்ளது. இதுடெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டுமன்றி நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து காவிரி நீர் பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுசெயலாளர் காவிரி ரெங்கநாதன் கூறுகையில்,
"மத்திய அரசு அறிவித்திருக்கும் நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை மிக மிக குறைவு. மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலும், மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வறுமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றனர். ஆனால் அவர்கள் நெல்லுக்கான விலையை நிர்ணயித்திருப்பதை கொண்டு பார்த்தால் 2032 ஆனாலும் விவசாயிகளின் வருமானம் உயராது.
மோடி மான்கி பாத்தில் ஒன்று பேசுகிறார் ஆனால் வெளியில் அதற்கு நேர் எதிராக பேசுகிறார். கோதுமைக்கான ஆதார விலை கூட நெல்லுக்கு இல்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு கூறியது போல உற்பத்தி செலவில் 50% உயர்த்திதரவேண்டும். கோதுமையை அறுவடை செய்து நேரடியாக பயன்படுத்தலாம், ஆனால் நெல்லின் நிலை அப்படியல்ல. டெல்டாவில் நெல் சாகுபடி மட்டுமே செய்ய முடியும். ஆகையால் நெல்லுக்கு ஆதார விலையாக 2500 ரூபாய் வழங்க வேண்டும்." என்கிறார்.