
உருவ கேலி காரணமாக பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குருசாமி சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் கிஷோர் என்ற 12 ஆம் வகுப்பு மாணவர் நேற்று நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தன்னுடைய மகனின் தற்கொலை முடிவுக்கு பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்களே காரணம் என பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கிஷோர் படித்து வந்த பள்ளியில் சக மாணவர்கள் மூன்று பேர் கிஷோர் குண்டாக இருப்பதாக உருவகேலி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை' என புகாரில் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் காரணமாக மருத்துவர்கள் ஆலோசனை பெற்று அதற்கான மருந்துகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சக மாணவர்கள் உருவக் கேலி செய்ததோடு கழிவறையில் ப்ளஸ் செய்ய வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் நான்காவது மாடியில் சோகத்துடன் அமர்ந்திருந்த கிஷோரை அழைத்து வர சென்ற பொழுது, தாய் கண் முன்னேயே திடீரென மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மாணவன் கிஷோர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது சம்பந்தமாக கீழ்பாக்கம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. உருவ கேலி காரணமாக பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.