Skip to main content

கீழ்வெண்மணி: 51வது ஆண்டு நினைவு தின அஞ்சலி!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

 

கீழ்வெண்மணியில் 44 தியாகிகளின் 51வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சவுந்தரராஜன் மற்றும்  திமுக, வி.சி.க., சிபிஐ கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

 

v


கடந்த 1968ல் நெல் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இடையே கூலி பிரச்சனை ஏற்பட்டது.  அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதுதான் பிரச்சனையாக ஆனது.  இந்த பிரச்சனையில் வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேரை கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பண்ணையாரின் ஆட்கள் கட்டிவைத்து அடித்துக்கொன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.  

 

25.12.1968ல் வெண்மணிக்குள் வந்து விவசாயிகள் மீது நெல் உற்பத்தியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள். விவசாயிகளும் பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். திடீரென விசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதால் விவசாயிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.  அப்போது, வெண்மணியில் இருந்த பெண்களும், குழந்தைகளும்  தெருவின் கடைசியில் இருந்து ராமையா என்பவரின் குடிசைக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.  இதை அறிந்கொண்டவர்கள், அக்குடிசையை வெளிப்புறமாக தாழ்போட்டுவிட்டு, குடிசைக்கு தீவைத்தனர்.  இந்த சம்பவத்தில்  20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44  பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.  இந்தசம்பவத்தில் 106 பேர் கைதானார்கள். ஆனால், ’இது சாதிய மோதல்’ என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. ’’அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல’’ என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள். 

 

வெண்மணியில் படுகொலைகள் நடந்ததை அடுத்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த வீட்டை நினைவிடமாக மாற்றி ஆண்டு தோறும் வெண்மணி தியாகிகள் நினைவு தின நாளாக டிசம்பர் 25ம் தேதியை அனுசரித்து வருகின்றனர். அதன்படி 51ம் ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு தினம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று  கீழ் வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்றது. 

 

சார்ந்த செய்திகள்