![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/ObqP6V3a-naV1uXZ4eKs40XQJiZzUV9MkUUmlq6w8kI/1602500731/sites/default/files/inline-images/AFDASFDGFGFD_0.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவை இல்லை என மத்திய அரசிற்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுத சூரப்பா என்ன மாநில முதலமைச்சரா என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், ஐந்து ஆண்டுகளில் 1,500 கோடியை அண்ணா பல்கலைகழகத்தால் உருவாக்க முடியும் என்றும், மாநில அரசின் நிதி பங்கு இல்லாமலேயே சமாளிக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒரு துணைவேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடியும். கல்வியை காவி மயமாக்க சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா? அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பதற்கான சட்ட முன்வடிவை ஆளுநர் நிராகரிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சூரப்பாவின் செயல்பாடு இட ஒதுக்கீடு, மாநில நிதி உரிமைக்கு விரோதமாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது. இட ஒதுக்கீட்டின் ஆணி வேரில் வெந்நீர் ஊற்றும் செயலில் ஈடுபடும் துணைவேந்தரை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
![anna university](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZHj-2Xy5BK2w53XuXahOBKsAdwzDZAau1tyaAUy8Mlw/1602501232/sites/default/files/inline-images/surappa-vc.jpeg)
இதற்கு, தனிப்பட்ட முறையில் மத்திய அரசிற்கு எந்த கடிதத்தையும் எழுதவில்லை என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசிடம் என்ன அறிக்கை சமர்ப்பித்தோமோ அதைத்தான் மத்திய அரசிற்கும் கடிதமாக எழுதினோம் என்று விளக்கமளித்துள்ளார். மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு மாநில அரசின் கையில் உள்ளது. தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படுகிறது. தமிழக அரசும் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாக இணைந்து பணியாற்றுகிறோம். ஒன்றாக இணைந்து பணியாற்றினால் மட்டுமே உயர் அந்தஸ்து கிடைக்கும். பேராசிரியர்கள், தமிழக அரசு, அமைச்சர்கள் என அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என்றார்.