கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக தமிழக அரசு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கான பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டி நேற்று உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அத்தொகுதி எம்.எல்.ஏ மறைக்கண்ணன் உள்பட பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி பேசிய போது, “ஆண்டுதோறும் திருநங்கைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் திருநங்கைகளுக்கான நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் வருவதில்லை; கலந்துகொள்வதில்லை. ஆனால், இன்று நாங்கள் வந்துள்ளோம். திருநங்கைகளின் கோரிக்கைகளுக்கும் அவர்களது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது திமுக தான். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் திருநங்கைகள் என்ற பெயர் வைத்து அவர்களுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
திருநங்கைகள் நல வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில் தான். கடந்த ஆட்சி அதை முடக்கிவிட்டது. மீண்டும் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதனை மீண்டும் புதுப்பித்து செயல்பட வைத்துள்ளார். எனது சட்டமன்றத் தொகுதியில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் அமைத்து அதன் மூலம் பலர் பலனடைந்துள்ளனர். சட்டமன்றத்தில் நான் முதன்முதலில் பேசும்போது திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்துத் தான் பேசினேன். அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் குறைகளை 24 மணி நேரமும் தெரிவிக்க எனது அலுவலகம் காத்திருக்கிறது. தேர்தல்களில் திருநங்கைகள் நிற்பதற்கு வாய்ப்பு கொடுத்தது திமுக தான். வரும் காலத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்களாகவும் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.