சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
சனாதன விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ - வாரண்டோ வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று (07-11-23) விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஜோதி ஆஜராகி வாதிட்டார்.
அதில் அவர் வாதத்தை முன்வைக்கையில், “இந்து அமைப்பினர் கோவில் சொத்துக்களை ‘ஸ்வாஹா’ செய்துவிட்டனர். அந்த சொத்துக்களை எல்லாம் அமைச்சர் சேகர்பாபு மீண்டும் திரும்ப மீட்டதால் தான் அவருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். மனு ஸ்மிருதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது என்று இந்து நூல்கள் கூறுகிறது. எனவே, சனாதனம் ஒழிப்பு வாதம் கண்டு கோபப்படாமல் அதை மாற்றத்துக்கான ஒரு வழியாக பார்க்க வேண்டும்.
சேகர்பாபு அய்யப்ப சாமியின் பக்தர் ஆவார். இந்து மதத்தைச் சேர்ந்தவர் தான். இந்துவாக பிறந்ததை பெருமையாக கருதினாலும், அதற்காக ஒருபோதும் சனாதனத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், பன்றி நுகர்ந்த உணவையும், சூத்திரன் கண்ணால் பார்த்த உணவையும் உண்ணக்கூடாது என்று சனாதனம் சொல்கிறது. இப்படிப்பட்ட சனாதனம் நமக்கு தேவையா? இதை ஒழிக்க வேண்டாமா? மனிதனை தரம் தாழ்த்தும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். ஆகவே, இந்துக்களுக்கு சனாதனம் தான் பொதுவானது என்று சொல்வதை ஏற்க முடியாது. அதை எதிர்ப்பதால் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறவும் முடியாது” என்று வாதிட்டார்.