பக்தர்கள் நேர்த்திக்கடன் என்ற பெயரில் தீ சட்டி எடுப்பது, தீமிதிப்பது, காவடி தூக்குவது, கரும்புத் தொட்டில் கட்டுவது, தரையில் உருண்டு அங்கப்பிரதட்சனம் செய்வது ஏன் தலைவன் தலைவிக்காக மண் சோறு சாப்பிடுவது என்ற பல நேர்த்திக்கடன்களை பார்த்திருப்போம் ஆனால் ஒரு கிராமத்தில் தீயை வாயில் போட்டு விழுங்குவது போன்ற நேர்த்திக்கடனை பார்த்திருக்கிறோமா? அப்படி ஒரு நேர்த்திக்கடனை செய்திருக்கிறார்கள் ஒரு கிராமத்து பக்தர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளாண்விடுதி கிராமத்தில் தான் இந்த விநோத நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
மார்கழி மாதத்தில் சஷ்டி திதியும் சதயநட்சத்திரமும் இணையும் நாளில் விநாயகருக்கு நோன்பு விழா எடுக்கும் பக்தர்கள் புள்ளாண்விடுதி கற்பக விநாயகர் கோயிலில் 21 பதார்த்தங்களுடன் படையல் வைத்து பூஜைகள் செய்த பிறகு மாவிளக்கு நிறைய எண்ணைய் ஊற்றி அதில் ஏராளமான திரி வைத்து தீபம் ஏற்றிய பிறகு மாவிளக்குடன் ஒரு திரி தீயையும் சேர்த்து வாயில் போட்டு விழுங்கினார்கள் பக்தர்கள். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.