!["Tamil Nadu has seen the scene where the opposition parties ran away" - Chief Minister M. K. Stalin's speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/2wrSFptv9G4u_UdBP838Em8j3pNTP455NO3CdTiRJlc/1739036626/sites/default/files/inline-images/a2502.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 08.15 முதல் எண்ணப்பட்டன.
மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ண திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. தொடர்ந்து 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றதால் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியைத் தக்க வைத்தார். நாம் தமிழர் கட்சி டெபாசிட் தொகை இழந்தது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் ஆவடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார். மேடையில் உரையாற்றுகையில், ''ஈரோடு கிழக்கு தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறோம். நம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். பெரியார் மண்ணில் பெரும் வெற்றி பெற்றுள்ளோம். ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை தருகிறோம். 2021 தேர்தலில் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை எனக்கு கொடுத்தனர். மக்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக வளர்த்து வருகிறோம்.
மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல அதிமுக மறைந்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாரான நிலையில் அதிமுக பதுங்கிவிட்டது. தொடர் தோல்விகளால் அதிமுகவுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுகவிற்கு தைரியம் இல்லை. தேர்தலுக்கு முன்பே யாருக்கு வெற்றி என அறிந்த எதிர்க்கட்சிகள் புறமுதுகிட்டு ஓடின. களத்துக்கே வராமல் எதிர்க்கட்சிகள் புறமுதுகிட்டு ஓடிய காட்சியை தமிழ்நாடு பார்த்து விட்டது'' என்றார்.