தமிழ்நாட்டுக்கு 70 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என டெல்லியில் நடந்த உணவு அமைச்சர்கள் மாநாட்டில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு நேற்று நடந்தது. அதில் அனைத்து மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அது போல் தமிழகத்திலிருந்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசும்போது, “தமிழ்நாட்டில் 2023 - 24 காரிப் பருவத்தில் கொள்முதலை 1.9.2023 முதல் தொடங்குவதற்கும் அனுமதி அளித்திட வேண்டும். கடந்த ஆண்டுக்கான நிலுவையில் உள்ள மானியத் தொகைகளையும் விரைந்து வழங்க வேண்டும். அதுபோல் மே 2022 வரை ஒன்றிய அரசிடமிருந்து மாதம் ஒன்றுக்கு 30.648 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே ஒதுக்கீடாகப் பெற்று வந்தோம். ஆனால் ஜூன் 2022 முதல் மாதம் 8.532 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதோடு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அரிசிக்குப் பதிலாக எங்களுக்கு ஒதுக்கீடு செய்திடவோ அப்படி இல்லை எனில் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் வழங்கிடவோ கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு போதுமான அளவு ராகி மற்றும் சிறுதானியங்கள் வழங்கினால் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரைவுபடுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி ஒதுக்கீடு செய்யப்படுகின்ற அரிசியைக் காட்டிலும் 70 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தமிழ்நாட்டுக்குத் தேவைப்படுகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு செயல்படுத்தி வரும் அனைவருக்கும் ஆன பொது விநியோகத் திட்டத்திற்கு மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்காகவும் இந்த அரிசி தேவைப்படுகிறது. அதனால் திறந்த வெளிச் சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் எங்களுக்கு மாதம் 70 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி என்று 10 மாதத்துக்கு 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசியைத் தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும். இவ்வாறு வழங்குவதால் வெளிச் சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும் முடியும்” என்று கூறினார்.