அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (09-02-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளினுடைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.