![Minister Ma.Subramaniyam provided medical kit to villagers near namakkal](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZllcdKOL_8TP0W0NrHDeqjwPPNSkyYFcPoCAr88v6Z8/1655878596/sites/default/files/inline-images/th-1_3274.jpg)
நாமக்கல் அருகே, போதமலையில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், அமைச்சர் மா.சுப்ரமணியன் 4 கி.மீ., தூரம் நடந்து சென்று, மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள போதமலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) நடந்தது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நாமக்கல் வந்திருந்தார். அவருடன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மேல்சபை எம்.பி., ராஜேஷ்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் கணேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அலுவலர்கள், ஆயில்பட்டி வழியாக ஜம்பூத்துமலைக்கு வந்தனர்.
அங்கிருந்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதமலைக்கு உட்பட்ட கெடமலை வரை அவர்கள் நடந்தே சென்றனர். அமைச்சர் மா.சுப்ரமணியன், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது; “தமிழக முதல்வர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். மாநிலம் முழுவதும் உள்ள மலைக்கிராமங்கள் மட்டுமின்றி, அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 75 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கடைக்கோடி மனிதனுக்கும் மருத்துவ சிகிச்சை என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத இரண்டு மருத்துவர்களை பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் 1021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள், மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது 9 கோடி ரூபாயில் பிரதான குடிநீர்க் குழாய் பதிக்கும் பணியும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இக்கல்லூரி, 100 மாணவர்கள் சேர்க்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுமையாக செயல்படும்.
இந்த மாவட்டத்தில் நாமக்கல் மட்டுமின்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. ராசிபுரம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்காக 23.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.