ஆடு திருடும் கும்பலால் சிறப்பு ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன். இவர் நேற்று (21.11.2021) அதிகாலை ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலை செய்தது ஆடு திருடும் கும்பல் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கடந்த சில வாரங்களாக, சனிக்கிழமை இரவுகளில் ஆடு திருடப்பட்டு அடுத்த நாள் பல்வேறு சந்தைகளில் அவை விற்கப்படுவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆடு திருடும் கும்பலைத் தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டியுள்ளார். அப்போது அந்தக் கும்பல் அவரை வெட்டி சாய்த்துள்ளது. இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவர்களில் ஒருவருக்கு 10 வயது என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.