திருச்சி மாவட்டம் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சோர்ந்த 174 குடியிருப்புகளுக்கான 124 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சேதுராப்பட்டியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, "திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்னும் 6 மாத காலத்திற்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். குறிப்பாக தேர்தல் சமயங்களில் ஸ்ரீரங்கம் தொகுதியில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் தற்போது மொத்தம் 7.5 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குடிநீர் விநியோகிக்க 528 இடங்களில் போர்வெல்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் குடிநீர் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் நிதி மற்றும் மாநில அரசின் நிதி என மொத்தம் 30 ஆயிரம் கோடியை தமிழக அரசு இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். ஒரு காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியை வெற்றி பெறவே முடியாத நிலை இருந்தது. 1989ல் தீட்சிதர் வெற்றி பெற்றார். 1996ல் மாயவன் வெற்றி பெற்றார். அதன்பிறகு பழனியாண்டி வெற்றி பெற்றுள்ளார். நான் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி அடைந்ததை விட அவர் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 15.36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தை திறந்து வைத்தார். தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 6 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.38.04 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்கள் வழங்கினார். வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இடுபொருள் மானியம் மற்றும் விதை தெளிப்பான்கள், தார்பாய் மானியம் வழங்குதல் என மொத்தம் 43.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.