விருதுநகர் வடக்கு மாவட்டம் – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உரையாற்றினார்.
“வணக்கங்களைக் கைக்கூப்பி நாங்கள் சொல்வதைவிட, உங்கள் காலைத் தொட்டு வணங்குவதில்தான் எங்களுக்கு மன நிறைவு. இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் மோடி வரலாம்; போகலாம். ஆனால், தமிழகத்திலே மோடிக்கு வேலை இல்லை என்று சொன்ன ஒரே தலைவர், நம்முடைய முதலமைச்சர். தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயற்கையானது. தோற்றவர்கள் இதுவரை பெரிய பொய் சொல்லியது இல்லை. பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோல்வியைச் சந்தித்தார்கள். அதற்காக ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அவர் அழுது கொண்டிருக்கவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்கள். பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்திலே தோல்வியைச் சந்தித்தார்கள். மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்கள். நம்முடைய இந்த நாடாளுமன்றத்திலேயே ஜெயலட்சுமி அம்மா எம்.பி. யாக இருக்கும்போது, வெறும் 6000 ஓட்டு வித்தியாசத்திலே தோல்வியைச் சந்தித்தார்கள். அவர்கள் ஒன்றும் அன்றைக்குப் புலம்பவில்லை. அதுதான் அரசியல்வாதியினுடைய லட்சணம்.
தேர்தலிலே சின்னவர்கள் பெரியவர்கள் என்ற கேள்வி எல்லாம் கிடையாது. தேர்தலில் கட்சிதான் முக்கியம். எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம். அந்த கட்சி ஜெயிக்கிறதா? இல்லையா? என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய, சின்னவர்கள் பெரியவர்கள் என்ற பயம் எல்லாம் தேர்தலில் கிடையாது. அப்படி சின்னவர்கள் எல்லாம் ஜெயிக்கவேண்டும் என்று சொன்னால், ஒவ்வொரு ஊரிலும் 26 வயசு ஆளாக நிறுத்திவிட்டுப் போயிடலாம். இருபத்தாறு வயசு ஆட்களை நிப்பாட்டி, சின்ன வயதிலே ஆளை நிறுத்தியிருக்கிறோம், அவர் தோற்கக்கூடாது என்று சொன்னால், எப்படி நாம் ஏற்றுக்கொள்ளமுடியும்? ஏற்கனவே அவர்கள் கட்சிக்கு அவர்கள் ஓட்டு வந்துள்ளது.
நம்முடைய கட்சிக்கு நமது ஓட்டு வந்திருக்கிறது. இதில் எங்களை என்ன குறை சொல்லமுடியும்? நாங்கள் அங்கே வாக்கு எண்ணுகிற இடத்திற்கு இரவு செல்லும் வரை வேட்பாளர் விஜயபிரபாகரன் அவர்களும், நம்முடைய தொகுதியினுடைய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களும் கடைசி வரைக்கும் இருந்துவிட்டுத்தான், எண்ணி முடித்துவிட்டுத்தான் போனார்கள். எண்ணி முடித்துவிட்டுப் போனவர்கள், இன்று அந்தத் தோல்வியைத் தாங்கமுடியாமல் எங்களைக் குறை சொல்லுகிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை; நீங்கள் தோற்றிருக்கிறீர்கள். எங்கள் முதலமைச்சரை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் ஜனநாயகமே ஒழிய, தோற்றவர் தூற்றுவது ஜனநாயகம் அல்ல.
நான்கூட தேர்தலில் தோற்றேன். தோற்ற நேரத்திலே கடைசிவரை நான் உள்ளே அமர்ந்திருந்தேன். என்னைப் பார்த்ததும் தங்கம் தென்னரசு அழ ஆரம்பித்துவிட்டார். நான், அரசு விடுங்க இந்தக் கணக்கை அடுத்த தேர்தலில் நேர் பண்ணுவோம், விடுங்கன்னு சொல்லிட்டுத்தான் போனோம். அதுக்காக தேர்தல்ல தோற்றவுடனே, அங்கிருந்த பெட்டி எல்லாம் மாறிப் போச்சு, ஓட்டுப் பெட்டி எல்லாம் மாத்திட்டாங்கன்னா சொல்லிட்டு வந்தேன். தேர்தல்ல தோற்பது என்பது இயற்கை. அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இருப்பவர்கள்தான் தேர்தலில் நிற்கவேண்டும். அதுதான் நியாயம். முறை இதுதான். கலைஞர் எங்களுக்குச் சொல்லி கொடுத்த முறை. எங்களைப் பொறுத்த அளவில் பரிசுத்தமாக இருக்கிறோம்.” எனப் பேசினார்.