தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் (வயது 88) நேற்று முன்தினம் (23-12-23) காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும் அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். 1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், மத்திய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர் எம்.எம். ராஜேந்திரன்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அண்ணாரின் மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.எம். ராஜேந்திரனின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மூலம் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.