திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி தொகுதியான ஆத்தூர் தொகுதியில் இருக்கும் குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய முத்தனம்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 44 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் கடந்த 1980ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மாங்கரை ஆற்றின் குறுக்கே மேம்பால வசதி வேண்டுமென முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் இருந்தபோது கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் வலியுறுத்தியதின் பேரில் மாங்கரை குறுக்கே பாலம் கட்ட திட்டமிட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது தொகுதிக்கு கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு கேட்டு சென்றபோது தாங்கள் பாலம் கொண்டு வர முயற்சி செய்ததையும் அதிமுக முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். அதனால் தொடர்ந்து மாங்கரை ஆற்றில் இறங்கி தான் ஊருக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருந்து வருகிறோம். தாங்கள் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக வந்தவுடன் எங்களுக்கு மாங்கரை ஆற்றின குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் முதல்வராக ஆன பின் பழைய முத்தனம்பட்டியில் வசிக்கும் 44 குடும்பங்களுக்காக 44 வருட கனவை நிறைவேற்றும் வகையில் மாங்கரை குறுக்கே பாலம் கட்டுவதற்காக மூன்று கோடியே 85 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜையுடன் திட்டப் பணிகளை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த பழைய முத்தனம்பட்டி மற்றும் மாங்கரை கிராம மக்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் மட்டும் அல்லாமல் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கும்ப மரியாதையுடன் மலர் தூவியும் அமைச்சர் ஐ. பெரியசாமியை வாழ்த்தினார்கள். அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, பாலம் கட்டுமான பணி முடிந்தவுடன் ரோடு வசதியை மீண்டும் சரி செய்து இரண்டு பக்கமும் லைட் போட்டு கொடுக்கப்படும். அதோடு ஒவ்வொரு வீட்டிலேயும் இரண்டு குடும்பம் மூன்று குடும்பம் என வசித்து வருகிறார்கள். அவர்களுக்காகவே பழைய வீடுகளை எல்லாம் புதுப்பித்து புதிதாக கூடுதலாகவும் வீடுகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் கூடிய விரவில் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்” என்று கூறினார்.