![Minister of Environment and Pollution Control](http://image.nakkheeran.in/cdn/farfuture/9jeDSr9maspHBhcnul8Vfo1uu2k3g9EtnmxvJXD2fdM/1602853448/sites/default/files/inline-images/sdfdfdsa.jpg)
சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற சுயதொழில் புரிய அரசு சார்பில் விலையில்லா ஆடு, மாடு, கோழிகுஞ்சுகள் கொடுத்து அதை அம்மக்கள் வளர்த்து அதன் மூலம் அவர்கள் வருவாய் ஈட்டுவது தான் இத்திட்டத்தின் நோக்கம்.
அதனடிப்படையில் விலையில்லா ஆடு, மாடு, கோழி குஞ்சுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அசீல் எனப்படும் நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
16ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, சலங்க பானையம் ஊராட்சியில் 600 பேருக்கு கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பயணாளிகளுக்கு கோழி குஞ்சு பெட்டிகளை கொடுக்க தொடங்கினார். பிறகு திடீரென அப்பெட்டிகளை திறந்து கோழி குஞ்சுகள் நல்ல நிலையில் உள்ளனவா என பரிசோதனை செய்த அமைச்சர் அதிர்ந்து போனார்.
பெட்டியில் உள்ள பல குஞ்சுகள் ஆரோக்கியமற்றதாக தரமில்லாமல் இருந்தது. கால்நடை துறை அதிகாரிகள் பக்கம் திரும்பிய அமைச்சர் "என்ன கோழி குஞ்சுகள் இந்த நிலையில் இருக்கிறது? என கேட்க அதிகாரிகள் "சார்நல்லாதான்..." என சமாளிக்க தொடங்க அதற்கு அமைச்சர் கருப்பணன் "ஐயா, நான் அடிப்படையில் ஒரு விவசாயி ஆடு, மாடு, கோழிய பத்தி எனக்கு நல்லா தெரியும் என்னை ஏமாற்ற முடியாது. இதில் உள்ள பாதி கோழி குஞ்சுகள் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறது.
பயனாளிகள் வாங்கிக் கொண்டு அவுங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள பாதி குஞ்சுகள் செத்துப் போயிடும். இந்த திட்டத்தின் நோக்கமே மக்கள் பயன் பெற வேண்டும் என்பது தான். தரமற்ற கோழி குஞ்சுகளை கொடுப்பது தவறானது. இதில் உள்ள நல்ல கோழி குஞ்சுகளை மட்டும் தேர்வு செய்து இப்ப கொடுப்போம், ஆகாத குஞ்சுகளை நீங்களே கொண்டு போயிட்டு நல்ல குஞ்சுகளை கொண்டு வந்து கொடுங்க...." என கண்டிப்புடன் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுவிட்டு நல்ல குஞ்சுகள் சிலவற்றை மட்டும் சில பயனாளிகளுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார் அமைச்சர் கருப்பணன்.