திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடைபெற்றது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இம்மாநாட்டில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,‘தங்கத்தால் கோட்டை கட்டி, வைரம் இழைத்த வாயில் அமைத்து, கோட்டையை, சுற்றிலும் ஆத்திகமெனும் ஆழி அமைத்து, அதிலே மத குருமார்களெனும் முதலைகளை வளர்த்து, கோட்டைமீது பரம்பரை எனும் கொடிமரம் நாட்டி, அதிலே படாடோபம் எனும் கொடியைப் பறக்கவிட்டு, பார்ப்போரின் கண் கூச பளபளப்புடன், கேட்போர் செவி குடையும் அட்டகாசத்துடன் ஆண்ட கொடுங்கோலனெல்லாம், பகல் பட்டினிகளால், பஞ்சை பனாதைகளால், நொந்த உள்ளத்தினரால், தாக்குண்டு, தகர்ந்து, தரைமீது சிதறிச் சிதறி வீழ்ந்து மண்மேடுகளானது, புராணமல்ல, வரலாறு’ என்ற அறிஞர் அண்ணாவின் வசனத்தை மூச்சு விடாமல் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “அந்த வரலாற்றை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியை வழிநடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படைப்பார். இந்தியா கூட்டணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரதமராக்க வேண்டும் எனக் கை காட்டுகிறது. அப்படி வாய்ப்பு வந்தால் பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக்கழிக்க வேண்டாம். அதையும் ஒரு கை பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.