
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 2 ஆயிரத்து 152 கோடி நிதியை உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில், தமிழகம் இணைய வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழக அரசு ஏற்காததால் தமிழகத்திற்கு நிதி தர மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான அத்திட்டத்தின் கீழ் இணைந்தால் மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழக அரசு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்திற்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை. தேசிய கல்விக்கொள்கை (NEP - 2020) திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக, மத்திய பாஜக அரசு வெளிப்படையாக மிரட்டல் விடுத்து, தமிழக மாணவர்களுக்கான 2 ஆயிரத்து 512 கோடி ரூபாயைப் பறித்து, பிற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளனர்.
மத்திய பாஜக அரசின் இந்த வற்புறுத்தலுக்குச் சற்றும் குறைவானதல்ல, தமிழக மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நின்றதற்காகத் தண்டனை. ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காகக் கல்விக்கான அணுகலின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்ற எந்த அரசாங்கமும் இந்திய வரலாற்றில் இருந்ததில்லை. தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு. தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பாஜக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.