தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்த இவ்விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ஆணைய வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரு.3. 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது. இதற்கு சிலர் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் கொடு எனக் கேட்பதாகத் தகவல் வருகிறது. யாருக்கும் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம். எந்த கொம்பன் கேட்டாலும் லஞ்சம் தராதீர்கள். அப்படி யாராவது கேட்டால் புகார் அளியுங்கள். அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கொடுக்கும் திட்டத்தில் இல்லாதவர்களிடம் பேரம் பேசி காசு(லஞ்சம்) வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம். யாருக்கும் நீங்க ஒத்த பைசாவை தரக் கூடாது கூடாது” என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அதிமுக கொண்டு வந்தது. அதற்கு திமுக லேபிள் ஒட்டியதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கலைஞருக்கு நாணயம் வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிச்சாமி விவரம் இல்லாமல் பேசுகிறார். இதே போலத்தான் அண்ணாவுக்கு வெளியிட்டார்கள், எம்ஜிஆருக்கு வெளியிட்டார்கள் அப்போதெல்லாம் எடப்பாடிக்கு கண் தெரியவில்லையா? கலைஞரை எதிர்க்கட்சி எண்ணம் உடையவர்கள் கூட வந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் மறைந்த தலைவர்களைக் கூட தாறுமாறாகப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் கால் புணர்ச்சி காட்டக்கூடாது.
தென்பெண்ணை பாலாறு இணைப்பு என்பது என்னுடைய லட்சியம் அதற்காக எப்படியாவது முயற்சி எடுப்பேன்” என்றார்.