பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை அருகே உள்ள குருமலை காட்டு பட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் இன்று கோட்டூர் சந்தையில் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொண்டு மினி லாரியில் 15 பேர் வால்பாறை சாலையில் உள்ள காடம்பாறை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து இதில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறல் சத்தம் கேட்டும் அவ்வழியாக நீண்ட நேரம் யாரும் செல்லாததால் விபத்து ஏற்பட்டது தெரியவில்லை. பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அங்கு விரைந்த பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சன்னாசி மல்லப்பன் ராமன் மற்றும் வெள்ளையன் அவரது மனைவி செல்வி உள்ளிட்ட 5 பேர் பலியாகினர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குருமலை காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் வாரம் ஒருமுறை இவர்கள் 35 கிலோமீட்டர் நடைபாதையாக வந்து பின்னர் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு மினி லாரியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்று அதே போல் பொருட்களை வாங்கிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.