‘மேட்டா ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள். 55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லிவிடுவார்கள். “என்னங்க? அவரையா தெரியாது? எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி ஆயிற்றே!” என்று பளிச்சென்று கூறுவர்கள்.
1973-ல் அரசியல் நெருக்கடியால் எம்.ஜி.ஆரை படாதபாடுபடுத்தி வெளிவந்த அவரது சொந்தப்படமான உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகைதான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர். 25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம்.ஜி.ஆரை புகழும் வரிகள் வரும்போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.
உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்து 46 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 71 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல!