அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், அரசியலில் கடைசி நேரத்தில் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல் ஓர் நிகழ்வு தற்போது கரூர் மாவட்டத்தில் நடந்து உள்ளது.
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்த பகுதியின் அ.தி.மு.க கிளைச் செயலாளர் சங்கரின் மனைவி தனலட்சுமி போட்டியிட்டார்.
தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்பதற்காக காத்திருந்த தனலட்சுமியை விஷப்பாம்பு கொத்தியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக தனலட்சுமியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தனலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் கடைசி வரை பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருந்த போதும் அந்த பகுதி மக்கள் தனலெட்சுமி மீது ஏற்பட்ட அனுதாபத்தில், அவருக்கு வாக்களித்துள்ளனர். இதனால் 2168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தனலட்சுமியின் வெற்றியை எம்.ஜி.ஆரை போன்று பிரச்சாரத்திற்கு வராமல் மருத்துவமனையில் இருந்தே வெற்றி பெற்று விட்டார் என கட்சியினர் இடையே பாராட்டு மழையாக பொழிகிறது.