
கடலூர் அருகே உள்ள எம் புதூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (45) விவசாயி. இவர் புதன் கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனது நிலத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் காளிமுத்துவை வழிமறித்து அவரை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்தனர். காளிமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 3 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காளிமுத்துவிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதே போன்று விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் மற்றும் பெரியப்பட்டு பகுதியில் லாரி ஓட்டுநர்கள் சீர்காழி பகுதியைச் சேர்ந்த பிரபு, மணிமாறன் ஆகிய இருவரும் லாரியை நிறுத்திவிட்டு அசந்து தூங்கியபோது இவர்களை அடித்து உதைத்து அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது கடலூர் அருகே உள்ள எம்.புதூர் பகுதியில் முந்திரி காட்டில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு வாலிபர் திடீரென கத்தியுடன் வந்து திருப்பாதிரிப்புலியூர் தலைமை காவலர் கோபி என்பவரை கையில் வெட்டியுள்ளார். இதை தடுக்க சென்ற கணபதி என்ற காவலரையும் அவர் வெட்டியுள்ளார். இதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் அந்த வாலிபரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இதனையெல்லாம் பொருட்படுத்தாத அந்த வாலிபர் இன்ஸ்பெக்டர் சந்திரனையும் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக சந்திரன் தனது கை துப்பாக்கியால் 3 முறை அந்த வாலிபரை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் வாகனத்தில் அந்த வாலிபரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் புதுச்சேரி மாநிலம் திலாசுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி மகன் விஜய் என்கிற மொட்டை விஜய் (19) என்பது தெரிய வந்தது. மேலும் விஜய் அந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பலின் தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் மீது கடலூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் விஜய்யின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விஜய் தாக்கியதில் காயமடைந்த காவலர்கள் கோபி மற்றும் கணபதி ஆகியோருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த எஸ்.பி ஜெயக்குமார் அவர்களிடம் நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. ஜெயகுமார், “கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை(ஏப் 2) அதிகாலை திருப்பாதிரிப்புலியூர் அருகே உள்ள எம் புதூர் பகுதி மற்றும் புதுச்சத்திரம் அருகே உள்ள பைபாஸ் பகுதி உள்ளிட்ட 3 இடங்களில் சில லாரி ஓட்டுநர்களைக் கத்தியால் தாக்கி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். இந்த குற்றவாளிகளை பிடிக்க கடலூர் டி.எஸ்.பி. ரூபன் குமார் மேற்பார்வையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் பொருட்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தனர். அப்போது இந்த வழி பறிக்கு தலைவனாக செயல்பட்ட புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விஜய் என்கிற மொட்டை விஜய் எம் புதூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெரில் ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கண்காணித்த போது அங்கு ஒரு இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது அப்போது அங்கு போலீசார் சென்றபோது திடீரென புதரில் மறைந்திருந்த விஜய் வெளியே வந்து காவலர் கோபியை கத்தியால் தாக்கியுள்ளார். இதை பார்த்த ஆய்வாளர் சந்திரன் அவனிடம் யாரையும் வெட்டாதே.. மரியாதையாக சரண் அடைந்து விடு என்று கூறுகிறார். இதைக் கேட்காமல் மறுபடியும் விஜய் காவலர் கணபதியையும் கத்தியால் வெட்டுகிறார். இதனால் வேறு வழி இன்றி ஆய்வாளர் சந்திரன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கும், காவலர்களை காப்பாற்றுவதற்கும் 3 முறை துப்பாக்கியால் விஜய்யை நோக்கிச் சுட்டுள்ளார்” என்றார்.
சுட்டுக் கொல்லப்பட்ட விஜய் என்கின்ற மொட்டை விஜய் புதுச்சேரி மாநிலம் திலாசுப்பேட்டையை சேர்ந்தவர் இவர் மீது வழிப்பறி, கூட்டுக் கொள்ளை, கொடிய ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மூன்று வழக்குகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 5 வழக்குகளும், புதுச்சேரியில் 22 வழக்குகளும் என மொத்தம் 30 வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இரண்டு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.