![teacher](http://image.nakkheeran.in/cdn/farfuture/-W8zn9J1qT83d2BOUZIBXSk0AdASFU19GzZbO-cGGwg/1533347634/sites/default/files/inline-images/Teacher_bhagwan_1.jpg)
இன்னும் அந்தக் காட்சி மனத்திரையை விட்டு மறைய மறுக்கிறது. ச்சே.. இப்படியும் ஒரு வாத்தியாரா? என பெரும் கேள்வி மூளையை குடைந்து எடுக்கிறது. அப்படியே எனக்குப் பாடம் எடுத்த வாத்தியார்களும் கண்முன்னே வந்து போகிறார்கள். சாட்டைக் கம்பு அடி, முட்டிப்போடுதல், குனியவைத்து முதுகில் அடித்தல், காதைத் திருகுதல் என ஒவ்வொரு வாத்தியாருக்கும் ஒவ்வொரு பனிஷ்மென்ட் பாணி உண்டு. அப்படி ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து 6-ங்கிளாஸ் வரைக்கும் எனக்கு வகுப்பு எடுத்த வாத்தியார்கள் நினைவலைகளில் நீந்துகின்றனர்.
அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டார் இந்த பகவான் ஆசிரியர். நாம ஸ்கூல்ல படிக்கும்போது இன்றைக்கு வாத்தியார் லீவு அப்படீன்னா சந்தோஷ பல்பு மின்னும். அதே வாத்தியார் வேற ஸ்கூலுக்கு இடமாறுதல்ல போறாருண்ணு கேள்விப்பட்டோம்னா மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். ஆனால் பகவான் வாத்தியார்கிட்ட படிச்ச மாணவர்கள் அப்படி அல்ல.
கடந்த 2, 3 நாட்களாக, பகவான் வாத்தியாரைப் பற்றிய செய்திகள் தான், ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் செம வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியர் தான் பகவான். மருந்தாய் கசக்கும் ஆங்கிலத்தை மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் கற்றுக் கொடுத்ததால், அவர்கள் மனதில் பச்சக் என ஒட்டிவிட்டார் இவர்.
![bagavan infront of school](http://image.nakkheeran.in/cdn/farfuture/EsR0pSpHPZkL8S78efrb_9KJ04aPn4H3IDFLcf90tmw/1533347642/sites/default/files/inline-images/bagavan%20infront%20of%20school.jpg)
தம்மிடம் படிக்கும் எந்த மாணவரையும் அதட்டியது கிடையாது, அதிர்ந்து ஒருவார்த்தை கூட திட்டியது கிடையாது. அதனால் தான், அவருக்கு வேறு பள்ளிக்கு இடமாறுதல் வழங்கிய சேதி கேட்டு, ஒட்டுமொத்த மாணவர்களும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர்களின் அன்பில் கரைந்த ஆசிரியர் பகவானும், உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டு அழுததது இன்னும் மறைய மறுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த "சாட்டை" என்ற திரைப்படத்தில் ஆசிரியராக வரும் சமுத்திரக்கனியை பிரிய மனமின்றி மாணவர்கள் அழுவார்கள். அந்தப் படத்தின் காட்சியைத் தான், இப்போது வெளியகரம் பள்ளி மாணவர்கள் ஞாபகப்படுத்தி உள்ளனர்.
இந்த நெகிழ்வான சம்பவம் செய்திகளில் வெளியானதை அடுத்து, ஆசிரியர் பகவானின் பணியிடமாற்றத்தை கல்வித்துறை நிறுத்தி வைத்திருக்கிறது. மாணவர்களின் பாசப் போராட்டம் வென்றிருக்கிறது. “மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்” என்று கூறியுள்ள ஆசிரியர் பகவான், “என் கடமையை செய்தேன். ஒரு நல்ல ஆசிரியராகப் பணிபுரிந்ததில் மிக்க மகிழ்ச்சி" என்கிறார்.
![bagavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/bf8xJgdSO12NRno3OJTKQX6J5mMzPoCr-xZ9AT4ectE/1533347622/sites/default/files/inline-images/Bagavan.jpg)
எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கு ஏற்ப, இவருக்கு பொருத்தமான பெயர் வைத்திருக்கின்றனர் இவரது பெற்றோர். 29-வயதே நிரம்பிய பகவான், ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தே 4 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் இத்தனை மாணவர்களின் அன்பைப் பெற்றிருப்பது ஆசிரியர் பணிக்கே உரிய அங்கீகாரம் தான்.!
‘வெறுமனே வாழ்ந்து இளைப்பாறி விட்டுப் போக வந்தவன்‘ என தனது முகநூல் பக்கத்தில் அறிமுக உரையாக குறிப்பிட்டுள்ளார் பகவான். அவரது இந்த தன்னடக்கம் தான் புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்திருக்கிறது!
நல்லதுக்கு காலமில்லை என்று சொல்வதற்கு, யாருக்கும் இனி மனம் வருமோ?