Skip to main content

குடும்பத்தையே தூக்கிடுவேன்! குண்டர்களை வைத்து மிரட்டும் அதிமுக வழக்கறிஞர்; மேட்டூரில் ஹவுஸ் அரெஸ்டில் தத்தளிக்கும் குடும்பம்

Published on 07/05/2019 | Edited on 08/05/2019

 

மேட்டூர் அருகே, அதிமுக வழக்கறிஞரின் மிரட்டலுக்கு பயந்து, ஒரு குடும்பமே வெளி உலகுக்கு வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

 

v


கடந்த 20ம் தேதி காலை, நம் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட ஒரு பெண், 'சார்.... இங்க அதிமுக வக்கீல் ஒருத்தர், 'எங்கள வெட்டுவோம், கொல்லுவோம்னு மிரட்டிக்கிட்டே இருக்காரு. குண்டர்களை ஏவி, வீட்டு மேல கற்களை வீசி எறிகிறார்...ஆம்பளைங்க இல்லாத வீட்டுல நானும் என் புள்ளைங்களும் இனி பிழைப்போமானே தெரியலைங்க சார்... ஆளுங்கட்சிக்காரர்ங்கிறதால யாருமே கண்டுக்க மாட்டேங்கறாங்க சார்... கடைசி நம்பிக்கையாக உங்ககிட்ட சொல்றோம்...' என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் வெடித்து அழுதார். 


உடனடியாக நேரடி விசாரணையில் இறங்கியது நக்கீரன். 


நம் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியவர், வாணிஸ்ரீ (39). சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் முத்தாளம்மன் காடு பகுதியில் வசிக்கிறார். இவருடைய கணவர் இருதயநாதன். சவூதி அரேபியாவில் ஓட்டுநராக வேலை செய்கிறார். சில மாதங்களுக்கு முன், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததால் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன், ஆகாஷ். டிப்ளமோ முடித்துவிட்டு, பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மகள் கஜோல். டிப்ளமோ முதலாம் ஆண்டு படிக்கிறார்.


வாணிஸ்ரீயின் குடும்பத்தினரிடம் பேசினோம்.

 

i


''சார்... இப்போது நாங்கள் குடியிருக்கும் இந்த வீடும், கொஞ்சம் காலி இடமும் சேர்த்து 5.50 சென்ட் பரப்பளவு கொண்டது. கடந்த 2000ம் ஆண்டு, பாண்டியன் என்பவரிடம் இருந்து இந்த வீட்டின் அடிமனையை கடைக்கால் போட்டிருந்த நிலையில், 78 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினோம். கடந்த 2017ம் ஆண்டு, எங்கள் சொத்தின் மொத்த பரப்பளவில் இரண்டேகால் சென்ட் நிலத்திற்கு மட்டும் நில அளவை தாசில்தார் பட்டா வழங்கினார். (பட்டா எண்.: 551, புதிய சர்வே எண்.: 1/12-62). எஞ்சிய நிலம் எங்கள் சுவாதீனத்தில் இருந்து வருகிறது. 


இந்தப் பகுதியில் பலர் கரட்டு புறம்போக்கில் வீடு கட்டி வசிக்கின்றனர். அவர்களில் யாருக்கும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. எனக்கு மட்டுமே பட்டா கிடைத்தது. இதை மனதில் வைத்துக்கொண்டு, எங்கள் வீடு அருகே வசிக்கும் அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜாவும், இதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம், தனபால், ராஜாவின் அக்காள் விஜயா, தம்பி அன்பு ஆகியோர், 'நீ மட்டும் எப்படி பட்டா வாங்கின? நீ இங்கே எப்படி இருந்துடறேனு பாக்குறோம்,' என்று தொடர்ந்து எங்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

r


இந்த நிலையில்தான், கடந்த 2017ம் ஆண்டில், முத்தாளம்மன் காடு மெயின் லைனில் இருந்து எங்கள் பட்டா நிலத்தின் வழியாக சதாசிவம், தனபால், பாக்கியம் ஆகியோர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக சட்ட விரோதமாக குழாய்களை பதித்தார் ராஜா. இதை எதிர்த்து நாங்கள் மேட்டூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எங்கள் நிலத்திற்குள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என்றும், எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் தீர்ப்பு அளித்தது.


ஆனால், இந்த தீர்ப்புக்குப் பிறகுதான் வழக்கறிஞர் ராஜா மூலம் தொந்தரவுகள் மேலும் அதிகரித்தன. ராஜாவின் கூட்டாளியான ஆட்டோ ஓட்டுநர் சதாசிவம், என் முன்பு நிர்வாணமாக நின்றபடி ஆட்டம் போட்டார். 'வாடீ... உன் புருஷன்தான் வெளிநாட்டுக்குப் போய்ட்டானே... நான் இருக்கேன் வாடீ...' என்று வெளியே சொல்ல முடியாதபடி ஆபாசமாக பேசினார். 


கடந்த 16ம் தேதி மாலை, ராஜாவும் அவருடைய ஆள்களும் திடீரென்று வந்து சட்ட விரோதமாக எங்கள் நிலத்தின் வழியாக குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகச் சொன்னேன். கலெக்டரிடமும் போன் மூலமாக புகார் சொன்னதால், பைப் பிட்டர் கனகராஜ் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.


பிறகு ஏப்ரல் 18ம் தேதி, தேர்தலில் ஓட்டுப்போட்டுவிட்டு அன்று மாலை, நாங்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றுவிட்டோம். மறுநாள் மாலையில் வீடு திரும்பியபோது மீண்டும் ராஜாவும் அவருடைய ஆள்களும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அதைத் தட்டிக்கேட்டபோது, என்னையும், கணவர் மற்றும் பிள்ளைகளையும் அந்த கும்பல் பைப்புகளாலும், கல்லாலும் தாக்க வந்தனர். நாங்கள் தப்பித்து எங்கள் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டோம். அவர்கள் எங்கள் வீட்டின் மீது கற்களை எறிந்தனர். கதவையும், ஜன்னல் கண்ணாடியையும் சேதப்படுத்தினர்.


வழக்கறிஞர் ராஜா ஆளுங்கட்சிக்காரர் என்பதால், அவர் மீது புகார் கொடுத்தாலும் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் எஸ்பி, கருமலைக்கூடல் போலீசார், கலெக்டர் என பலரிடம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு பயந்து பயந்து வாழ முடியும்? ராஜாவுக்கு பயந்து கொண்டு, பல நாள்கள் நாங்கள் வீட்டுக்குள்ளேயே கைதிபோல அடைப்பட்டுக் கிடந்திருக்கிறோம்.


இவ்வளவுக்குப் பிறகும்கூட, கடந்த 22.4.2019ம் தேதி காலையில், என் மகன் வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து கிளம்பியபோது, ராஜாவும், சதாசிவமும் மகன் மீது ஆட்டோவை ஏற்றிக்கொல்ல முயன்றனர். இதில் அவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. எங்கள் உயிருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ராஜாவும்  அவருடைய ஆள்களும்தான் காரணம்,'' என்று கதறி அழுதார் வாணிஸ்ரீ.


வாணிஸ்ரீயின் வீடு அருகே மின்வாரியத்திற்குச் சொந்தமான காலி நிலம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன், மின்வாரியம் சார்பில் நிலத்தை அளந்து, இருபுறமும் முட்டுக்கல் நட்டுள்ளனர். வாணிஸ்ரீயின் வீட்டுச்சுற்றுச்சுவரில் சுமார் நான்கு அடி தூரத்திற்கு வெளியேதான் இந்த முட்டுக்கற்கள் நடப்பட்டுள்ளன. இந்த அளவீட்டின்படி கொண்டால், ராஜா தரப்பினர் குடிநீர் குழாய் கொண்டு சென்றுள்ள இடம் வாணிஸ்ரீயின் சுவாதீன எல்லைக்குள்தான் வருகிறது.


இது தொடர்பாக தனபாலிடம் விசாரிக்கச் சென்றோம். அவரோ, ''வாணிஸ்ரீ தன்னுடைய நிலம் என்று சொல்லி வரும் நிலத்தின் வழியாகத்தான் இங்குள்ள சில குடும்பங்கள், காலங்காலமாக நடைவழித்தடமாக சென்று வருகிறோம். எங்கிருந்தோ வந்து திடீரென்று, அந்த பாதையை அடைப்பேன்... தடுப்பேன் என்று சொன்னால் எப்படிங்க சார்? அதுவுமில்லாமல் நாங்கள் தண்ணீருக்காக ரொம்பவே கஷ்டப்படறோம். அதனால்தான் நாங்கள் புறம்போக்கு நிலம் வழியாக எங்கள் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு எடுத்துக் கொண்டோம். அதை வாணிஸ்ரீ தடுக்கப் பார்க்கிறார்...,'' என்றார்.


தனபாலிடம் பேசிக்கொண்டிருப்பதை அறிந்த வழக்கறிஞர் ராஜா, வேக வேகமாக தனபாலின் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் நம்மிடம், ''என்ன சார்... யார் சார் நீங்க?.. என்ன விசாரிச்சிட்டு இருக்கீங்க...?'' என சற்றே குரலை உயர்த்திய நிலையில் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பினார்.


அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். பிறகு அவரே பேசினார்.

 

r


''சார்... இந்த பொம்பள எங்கெங்கோ போய் முட்டி மோதிப் பாத்துடுச்சு. ஒண்ணும் பண்ண முடியல. யார்கிட்ட பேசினாலும் அழுது புலம்பும். எல்லாம் நடிப்பு சார். ஒரு சர்வேயர் புள்ள வந்து இந்த நிலத்தை அளந்து பாத்துட்டு, குழாய் பதிச்சிருக்கிற இடம் உங்களுக்கு சொந்தமானது இல்லேனு சொல்லிட்டுப் போய்டுச்சு. உடனே அந்த புள்ள மேலயும் வாணிஸ்ரீ கம்ப்ளைண்டு கொடுத்துட்டாங்க. 


மக்கள் போய்ட்டு வந்துட்டு இருக்கற தடவழியை அடைக்கறது, யாராவது ஏதாவது சொன்னா உடனே செல்போனில் வீடியோ எடுக்கறதுனு அந்தம்மாதான் டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்குது. நீங்க யார்கிட்ட வேணும்னாலும் கேட்டுப்பாருங்க... 'ராஜா கொஞ்சம் ஸ்ட்ரெய்ட் பார்வர்டு... பத்தஞ்சு செலவு பண்ணாலும் நியாயமா நட ந்துக்குவாப்ல'னுதான் சொல்லுவாங்க. அதனாலதான் பல வக்கீலுங்க, இவ கொடுக்கற கேஸை எடுத்து நடத்தாம ஓடிப்போய்ட்டாங்க,'' என்றார் வழக்கறிஞர் ராஜா.


மேலும் அவர், ''சார்... எல்லாத்தையும் கேட்டுட்டு இந்தப் பிரச்னையில நம்மள இழுத்து விட்டுடப் போறீங்க... அப்புறம் உங்க மேல தேவையில்லாம டெஃபர்மேஷன் கேஸ் போட வேண்டியது இருக்கும்,'' என்று அவருக்கே உரிய பாணியில் சிரித்துக்கொண்டே நம்மை எச்சரித்தார்.


வாணிஸ்ரீ முன்பு நிர்வாணமாக நடனம் ஆடியது குறித்து சதாசிவத்திடம் கேட்டபோது, ''ஆமா சார்... அவங்க முன்னாடி நான் லுங்கிய தூக்கி காமிச்சேன்தான். ஒத்துக்கிறேன். அந்தம்மா பையன் எதுக்கு எடுத்தாலும் வந்து செல்போன்ல வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தான். இங்குள்ள வயசு பொண்ணுங்க போகும்போதும் வரும்போதும் வீடியோ எடுத்தான். அதனால பதிலுக்கு, 'நல்லா பாத்துக்குங்கனு' சொல்லி நானும் லுங்கிய தூக்கிக் காமிச்சேன்,'' என்று சுய விளக்கம் அளித்தார் சதாசிவம்.


இதுகுறித்து கருமலைக்கூடல் காவல் ஆய்வாளர் ஞானசேகரிடம் கேட்பதற்காக செல்போனில் தொடர்பு கொண்டபோது, ''நான் கோர்ட்டில் இருக்கிறேன். அப்புறம் பேசுங்கள்,'' என்றார். அவர் தரப்பு விளக்கங்களை பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.


கடல் கடந்து கணவன் இருக்க, சொந்த ஊரில், சொந்த வீட்டில், குழந்தைகளுடன் ஒரு பெண் வசிப்பதே மேட்டூரில் கேள்விக்குறியாகி இருக்கிறது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

சார்ந்த செய்திகள்