தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டள்ளது. புற்றுநோய் வர இந்த ஆலை காரணமாக இருக்கிறது. நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையை மீறி போராட்டகாரர்கள் தொடர்ந்து சென்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர். அப்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர். இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீசாரின் தூப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரண்டு பேர் பலியான சம்பவத்திற்கு திரைப்பட இயக்குநர் கவுதமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. சொந்த மக்களை சுட்டுக்கொல்வதற்கு பெயர் அரசா? ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்றார்.
படம்: குமரேஷ்