![](http://image.nakkheeran.in/cdn/farfuture/DZMhK4FzLUAEBIp1wnFYGp20MNTEmMIHcUwySoqbKcE/1533347662/sites/default/files/inline-images/metha%20patkar.jpg)
ஜெயலலிதா ஆட்சியில் கூட இல்லாத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சென்னையில் குடிசைவாழ் மக்கள் 15 ஆயிரம் பேரை கடந்த ஆண்டு நகரை விட்டு வெளியேற்றிவிட்டனர். இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுகின்றனர். ஆனால், கூவம், அடையாறு உள்ளிட்டவற்றில் உள்ள பெரிய நிறுவனங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தூத்துக்குடியில் நீண்ட காலமாக திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆசியுடன் இந்த துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. சமூக விரோதிகள் ஊடுருவியதால் வன்முறை ஏற்பட்டதாக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி என்றால், சமூக விரோதிகள் யார் என்று பட்டியல் வெளியிட வேண்டும். போராட்டத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் கூறியது உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது.
மக்கள் பிரச்னைகளில் குரல் எழுப்பிய வேல்முருகன், மன்சூர் அலி கான், ப்யூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற கைது நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் கூட இல்லாத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.