![Mayiladuthurai Dt Perambur Police Station constable Thirunavukarasu incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/dV_rHd8Tu-p50W73Zc7XD9cnv3RdPofzFQk-KRgKgcQ/1721024871/sites/default/files/inline-images/mayil-perambur-ps-art.jpg)
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து சென்னையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.
இதனையடுத்து காவலர் திருநாவுகரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.