![Many houses in the same area were damaged by fire ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/OAGG474Hl3k6GLKsOCg5rhlHCbUDb0oG3n-BMpFW16w/1608981247/sites/default/files/inline-images/th-1_171.jpg)
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகில் உள்ளது கரசனூர் கிராமம். இந்த கிராமப் பகுதியில், குன்னம் சாலை அருகே இருளர் இனமக்களின் தனிக் குடியிருப்பு உள்ளது. நேற்றிரவு இங்கு வசித்துவரும் மயிலி என்பவரின் குடிசை வீடு, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அதனைத் தொடர்ந்து, அவரது வீட்டின் அருகில் இருக்கும் 12 குடிசை வீடுகளுக்கும் 'தீ' பரவி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வானூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கப் போராடினார்கள். இருப்பினும் அனைத்து வீடுகளும் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வானூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். சேத மதிப்பு, சுமார் 6 லட்சம் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 12 வீடுகள் எரிந்து நாசமானது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.