நெகிழி உள்ளிட்ட மக்காத பொருட்களால் நிலமும் நீரும் காற்றும் மாசடைந்து பருவநிலை மாறிக் கொண்டிக்கிறது. இதனை மாற்றியமைக்க நெகிழி பயன்பாட்டை குறைக்க 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது. ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தால் மட்டும் போதுமா, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி, தனிநபர்கள் முதல் தனியார் நிறுவனங்களை வரை முன்வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசும் விருதும் வழங்க முடிவெடுத்த அரசு அதற்கான தேர்வுகள் நடத்தியது. இதில் ஏராளமான பள்ளிகள், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு 3வது பரிசு கிடைத்துள்ளது. இன்று சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் நடந்த விழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழாவில் துறை அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு விருது மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்.
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு 3வது பரிசு மற்றும் விருது பெற்ற கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கான விருது மற்றும் ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை பள்ளித் தலைமை ஆசிரியை வள்ளிநாயகி, உதவி தலைமை ஆசிரியர் குகன், ஆசிரியர்கள் கொடியரசன், கண்ணன், பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி கார்த்திகா உள்பட பலர் பெற்றுக் கொண்டனர். இந்தப் பள்ளியில் பல வருடங்களாக மண்பானையில் குடிதண்ணீர், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்த்து சில்வர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடமும் மாணவர்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் கல்வியிலும் கலையில் சாதித்து வரும் பள்ளியில் நீட் தேர்ச்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவிகளை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிய பள்ளி நீட்டுக்கு முன்பே பல மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை உருவாக்கி தொடர் சாதனை படைத்து வரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தற்போது மஞ்சப்பை விழிப்புணர்விலும் விருது பெற்றுள்ளதால் பொதுமக்களும் பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர்.