திருப்பூரில் தனியார்ப் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளைக்கோவில் அய்யனூர் அருகே தனியார்ப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் மாணவர்களை ஏற்றி கொண்டு மலையப்பன் என்பவர் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக பேருந்து சிரமப்பட்டு சாலையின் ஓரத்தில் பத்திரமாக நிறுத்தினார். இதில் அந்தப் பேருந்தில் பயணித்த 20 மாணவர்களும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர். உடனடியாக ஓட்டுநர் மலையப்பன் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வாகன ஓட்டுநர் மலையப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 'இறக்கும் தருவாயிலும் மாணவர்களின் உயிர்காத்த மலையப்பன் மனிதநேயத்தால் புகழுருவில் வாழ்வார்' எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர் போகும் நேரத்திலும் மாணவர்களின் உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டும் என ஒருபுறம் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.