![m1](http://image.nakkheeran.in/cdn/farfuture/9dz_uVOxgBIt2IDdead0036jXXHEdzz4O1J05rP7NQU/1595045473/sites/default/files/2020-07/mgr33.jpg)
![m2](http://image.nakkheeran.in/cdn/farfuture/R8xxpAnS8Cw4g-tPpcVSrnaGICh7_rp04tfGwM4REBI/1595045473/sites/default/files/2020-07/mgr5557888.jpg)
![m3](http://image.nakkheeran.in/cdn/farfuture/Esx6FiZziZ1KeIpFlzC3IQl8QfhPNg6vKtstnzzD87U/1595045473/sites/default/files/2020-07/mgr3.jpg)
![m4](http://image.nakkheeran.in/cdn/farfuture/-hVglStVIdBxoiKDN0k8rI6vW8oZPLT4lZIrivV2EoA/1595045473/sites/default/files/2020-07/mgr1.jpg)
‘மாத்தி யோசி பாலிசி’ என்றால், மதுரைக்காரர்களின் மனதிலிருந்து வெடித்துக் கிளம்பும். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ (திரையில்தான்) எம்.ஜி.ஆர். என்றால், ‘மதுரை மீண்ட சுந்தரபாண்டியர்’ ஆகிவிட்டார், செல்லூர் ராஜு.
தன் மனைவி ஜெயந்திக்கு கரோனா தொற்று உறுதியாகி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரை கவனித்துக்கொண்ட, செல்லூர் ராஜூவையும் தொற்றிக்கொண்டது, கரோனா. 10 நாள் சிகிச்சைக்குப் பிறகு, பூரண குணமடைந்து, அவர் வீடு திரும்பியிருக்கிறார். இந்த நல்ல தகவலைத் தெரிவிப்பதற்காக, தன் மனைவி ஜெயந்தியுடன் செல்லூர் ராஜூ சிரித்தபடி இருக்கும் போட்டோவை போஸ்டர் ஆக்கி, ஊரறிய ஒட்டி கொண்டாடியிருக்கின்றனர், அமைச்சரின் மதுரை விசுவாசிகள். எப்படித் தெரியுமா?
‘ஊறு வரும் என்றாலும் ஊருக்கு உழைத்தவரை.. மீட்டு வந்து வீடு சேர்த்த தர்மத்தை.. உலகம் உள்ளவரை தொடர்ந்திடுவோம்..’ என்ற போஸ்டர் வாசகங்கள் மூலம், செல்லூர் ராஜு விசுவாசிகள் சொல்ல வருவது என்னவென்றால்- ஊருக்காக உழைத்தவருக்கு (ஊருக்கு உழைப்பவன் - எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்தின் பெயர்) கரோனா துன்பம் வந்தாலும், அவர் செய்த தர்மம், அத்துன்பத்திலிருந்து மீட்டுவிட்டதென்றும், அதே தர்மத்தை, உலகம் உள்ளவரையிலும் தொடர்ந்து செய்வோம் என்பதுதான்.
செல்லூர் ராஜு விசுவாசிகள் நீட்டி முழக்கிச் சொன்ன விஷயத்தை 57 வருடங்களுக்கு முன்பே, ‘தர்மம் தலைகாக்கும்.. தக்க சமயத்தில் உயிர் காக்கும்..’ என்று, பாட்டாகவே பாடிவிட்டார், எம்.ஜி.ஆர்.
எத்தனையோ சினிமா போஸ்டர்களைப் பார்த்து ரசித்த மதுரைவாசிகளின் கண்களுக்கு, செல்லூர் ராஜு போஸ்டரை கரோனா விருந்தாக்கியிருக்கின்றனர்.