திருச்சி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், 14 ஒன்றியங்களில் ஒன்றியக் குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. தலைமை, இவர்களின் அதிகாரத்தை குறைப்பதற்காக மாவட்ட கலெக்டர் மூலம் இவர்கள் எந்த பணிகள் செய்தாலும் முன் அனுமதி பெற்றுதான் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளுக்கான டெண்டர்களை அ.தி.மு.க. தலைமை, யாருக்கு கொடுக்க சொல்கிறதோ அவர்களுக்கு கொடுத்துவந்தது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவில் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாளர்களின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை தவிர்த்து ஏனைய செலவுகளை மேற்கொள்ளக்கூடாது. திட்டப்பணிகளுக்கான தொகையை வழங்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குனரின் முன் அனுமுதி பெற வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசன் கூறியிருந்தார்.
கலெக்டரின் ஒருதலைப்பட்சமான உத்தரவு காரணமாக ஊராட்சி ஒன்றியக்குழுவால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள், மதிப்பீடு, ஒப்பந்தம் வழங்குவது ஆகியன ஊராட்சி ஒன்றியக்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் கலெக்டர் தலையீடுவதை ஏற்கமுடியது. எனவே கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று திருச்சி மாவட்ட திருவெறும்பூர், வையம்பட்டி, மருங்காபுரி, ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியன் ஆஜரானார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியை செலவு செய்வதற்கு தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டுமெனும் கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.