Skip to main content

“இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும்” - சென்னை உயர்நீதிமன்றம்

Published on 02/01/2025 | Edited on 02/01/2025
Madras High Court said Everyone should be ashamed such incident happened

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாமகவின் மகளிர் அணி சார்பில் சௌமியா தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தது. இதனிடையே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனிடையே போராட்டம் நடத்த அனுமதி கோரி பாமக வழக்கறிஞர் பாலு  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, “பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று.. இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப் பட வேண்டும். இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல. வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்” என்றார்.

சார்ந்த செய்திகள்