![Lottery sales that question the lives of many!](http://image.nakkheeran.in/cdn/farfuture/jl2MF6ZMwoU4vcCausTFJ0B0hwEYrRlHNTF3OabfK-E/1606581451/sites/default/files/inline-images/re6t466.jpg)
சமூகத்தில் எப்படி போதைப் பொருள் பலரது வாழ்க்கையைச் சீரழிக்கிறதோ, அதேபோன்று லாட்டரி விற்பனையும் பலரது குடும்பத்தைச் சீரழித்துக் கேள்விக் குறியாக்கி வருகிறது.
அன்றாடவாழ்வில் கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஒருபாதியை, அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற எண்ணத்தில், 100 ரூபாய்க்கு லாட்டரி வாங்குகின்றனர். அதில், குறைந்தது 1,000 ரூபாயாவாது நமக்குப் பரிசு விழும் என்று நம்பி, சம்பாதித்த பணத்தில், லாட்டரி சீட்டு வாங்கி கடனாளி ஆகின்றனர். இதனால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை, இந்தச் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
அப்படி அதிர்ஷ்டத்தை நம்பும் ஒரு கூட்டத்தை ஏமாற்றி, பணம் சம்பாதிக்க மற்றொரு கூட்டம் புதிய புதிய வழிகளைக் கையாண்டு வருகிறது. அப்படி, ஒரு கும்பல், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் தடைசெய்யப்பட்ட, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை, விற்பனை செய்தனர். அதில், 6 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொட்டியம் தாலுக்கா காட்டுப்புத்தூரில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக, போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி எஸ்.பி ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், எஸ்.ஐ நாகராஜ் தலைமையில், திருச்சியிலிருந்து வந்திருந்த தனிப்படை போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது தொட்டியம் தாலுக்கா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (55), பாண்டமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26), காட்டுப்புத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன்(40), குணசேகரன்(55), டினோபரமேஸ் (32), குமார் (47) ஆகியோர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள், செல்ஃபோன், உபகரணப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ,6,750 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதில் தப்பி ஓடிய காட்டுப்புத்தூரைச் சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.