கொளத்தூர் தொகுதியில், போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் ரூ.61.98 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்திற்கு சிட்டி பாபு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம், கொளத்தூர் - ஐ.சி.எப். பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொளத்தூர் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பல மாவட்டங்களுக்கு சென்று பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறேன். எனது தொகுதிக்கு வரும்போது கடமைகளை நிறைவு செய்துவிட்டு, சொந்த வீட்டில் நுழைவது போன்ற நிம்மதி, மகிழ்ச்சியைப் பெற்றுள்ளேன்.
தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சியில் முதல் மேம்பாலமாக சென்னையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. அண்ணா இல்லை என்றாலே நம் நிலை வேறு மாறி போயிருக்கும். அண்ணா மேம்பாலம் இல்லை என்றால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என நினைத்துப்பாருங்கள்” என பேசினார்.