திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள எர்ணாமங்களம் கிராம பஞ்சாயத்து தலைவர்க்கு நின்றவர் பாஞ்சாலை. பெரணமல்லூர் ஒன்றியம் ஆணைபோகி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் கஜபதி. செங்கம் ஒன்றியம் 16வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் ரவி, இதே ஒன்றியத்தில் உள்ள 26வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர் செந்தில்.
இந்த 4 வேட்பாளர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை முன்னிட்டு வேட்புமனுதாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையின் போதும் இவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தன. அதனாலயே இவர்களது மனுக்கள் ஏற்கப்பட்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் இவர்கள் 4 பேரும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வாக்குபதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்த வேட்பாளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 4 வேட்பாளர்களும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து முறையிட்டனர். என்னால் ஒன்னும் செய்ய முடியாது என கைவிரித்தார் என்கிறார்கள் வேட்பாளர்கள் தரப்பில்.
இதனால் 4 வேட்பாளர்களும் வாக்களிக்க முடியவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசனை செய்தபின், 4 பகுதியின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார். இந்த வாக்கு சீட்டுகள் தனியே கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். மாநில தேர்தல் ஆணையம் கூறும் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் போன்றவற்றை மேற்க்கொள்ள ஒவ்வொரு தாலுக்காவிலும் துணை தாசில்தார் தலைமையில் அலுவலகம் செயல்படுகிறது. இவர்களால் மட்டுமே பெயர் சேர்க்கை மற்றும் நீக்கல் முடியும். அவர்கள் ஆதரவுயில்லாமல் நீக்கியிருக்க முடியாது. அதனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த 4 வேட்பாளர்கள் மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலரின் எதிர்ப்பார்ப்பு. ஆனால், அதுப்பற்றி இதுவரை மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பத இப்போது வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.