காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவம் 45 நாட்களை கடந்து இன்று 46வது நாளாக நடைபெற்று வருகிறது. முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதரை இதுவரை சுமார் 1 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நாளை 16ம்தேதி வெள்ளிக்கிழமை மட்டுமே தரிசனம் செய்யலாம் என்று உள்ள நிலையில் இன்று சுதந்திர நாள் விடுமுறை காரணமாக சுமார் 6 லட்சம் பக்தர்கள் காஞ்சியில் குவிந்தனர். 46-வது நாளான இன்று அத்திவரதர் மலர்களால் புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
6 லட்சம் பக்தர்கள் குவிந்ததால், அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவரும் மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையும் திக்குமுக்காடியது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு மேல் கருட சேவை நடைபெற்றதால் அனைத்து தரிசனங்களும் நிறுத்திவைக்கப்பட்டன. அதே போல சிறப்பு தரிசனமான சிவப்பு விஐபி டோனர் பாஸ் மற்றும் பச்சை நிற விவிஐபி டோனர் பாஸ் இரண்டும் செல்லாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அதிரடியாக அறிவித்தார். நாளை பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், மற்ற எந்த ஒரு சிறப்பு தரிசனமும் கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
கூட்ட நெரிசலை தவிர்க்க நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை மட்டுமே பொது தரிசனமும் அனுமதிக்கப்படும். நாளை நள்ளிரவு முதல் அனைத்து தரிசனுமும் ரத்து செய்யப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 17 அன்று வரதராஜபெருமாள் கோவில் ஆகம விதிகளின் படி அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வெள்ளிப்பெட்டியில் வைத்து அத்திவரதர் வைக்கப்படுகிறார். இதன் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து 2059ல் தான் அத்திவரதரை தரிசிக்க முடியும்.