சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்ன என்பது முறையாக இன்னும் முழுமையாக வெளிவராத சூழ்நிலையில் ஊடகங்களில் பல்வேறு வகைகளில் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சில கட்சிகள் வழக்கு தொடுத்த காரணத்தால் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் எடுத்து வைத்த கோரிக்கை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என்ற அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருந்தோம்.
அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள். 2016 ல் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடுத்த நேரத்தில், அப்போதைய அரசு செயலாளராக இருக்ககூடிய அன்சராஜ் வர்மா ஒரு பிரமாண வாக்குமூலத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2016ஆம் ஆண்டிற்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தில் அதை மாற்றி 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகையை 2016ஆம் ஆண்டிற்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தவறாக இன்றைக்கு சொல்லியிருக்கிறார். எனவே இந்த முரண்பாட்டை உச்சநீதிமன்றம் உணர்ந்து இன்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது.
மேலும் தற்போது மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் முழு விவரத்தை, அதன் உணர்வை புரிந்து கொண்டு அரசியல் சட்ட அமைப்பை காப்பாற்ற முறையாக இந்த தேர்தல் நடத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தீர்ப்பு தேர்தலை தவிர்க்க முயற்சித்த திமுகவிற்கு கொடுக்கப்பட்ட சம்பட்டி அடி என அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு
அவர் அரசியல் கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். முழு தீர்ப்பு விவரங்கள் இன்னும் தெளிவாக வெளியே வரவில்லை வந்த பிறகு அதற்கு நான் பதில் சொல்கிறேன். சம்பட்டி அடி என்ற சொன்ன அவருக்கு நான் சொல்ல விரும்புவது. ஏற்கனவே இதே உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்துவோம் என்று சொல்லி இருந்தார்கள். அதில் எந்த சிக்கலும் இல்லை முறையாக பிரித்து வைத்திருக்கிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று உணர்ந்த உச்சநீதிமன்றம் ஒன்பது மாவட்டங்களுக்கும் தேர்தல் தள்ளி வைக்க சொல்லியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் வரைமுறை கொடுத்துள்ளது. எங்களுக்கு அவர் சம்பட்டி அடி என்று சொல்கிறார் அல்லவா அவர்களுக்கு கொடுத்தது 'மரண அடி' இதுதான் என்னுடைய பதில்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா அறிமுகப்படுத்திய நேரத்திலேயே திமுக சார்பில் எங்களுடைய மக்களவை குழுவின் உடைய தலைவர் டி.ஆர்.பாலு கடுமையாக எதிர்த்திருக்கிறார். எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அறிமுக நிலையிலேயே கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளார். மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற தயாநிதிமாறன் அழுத்தம் திருத்தமாக துணிச்சலாக எல்லா பிரச்சனைகளையும் பேசி பதிவு செய்துள்ளார். இரவு 12 மணி வரை நடைபெற்ற விவாதத்தில் முழுமையாக திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஓட்டெடுப்பில் கலந்துகொண்டு எதிர்த்து ஓட்டும் போட்டுள்ளார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை இதை ஆதரித்து வெளியில் பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். ஆதரித்து பேசும் இந்த சூழ்நிலையை பார்க்கும் பொழுது எடப்பாடி ஆட்சியை இதுவரை ஊழல் ஆட்சி, கொலைகார ஆட்சி, கொள்ளைகார ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தோம் இப்பொழுது தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாகவும் எடப்பாடி ஆட்சி உள்ளது என்றார்.