சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76லிருந்து 85 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
![lkg ukg holiday issue - CM Edappadi Palaniswami explanation](http://image.nakkheeran.in/cdn/farfuture/3Ch7W5izkmKQjHfEarY1h8jcF27h9fftKDW4MwakTis/1584190316/sites/default/files/inline-images/111111_151.jpg)
இதேபோல் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16- ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை என்று நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை எனவும் அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை தான், முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிவித்தார். பின்னர் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினோம்; கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றார். இதைத்தொடர்ந்து ரஜினி இன்னும் கட்சியே தொடங்காத நிலையில் அவர் பேசியது பற்றி கருத்து கூறவேண்டிய அவசியமில்லை ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என தெரிவித்தார்.