கடலூர்: விருத்தாசலம் அருகே குருணை மருந்து கலந்த குடிநீர் குழாயை சரி செய்ய சென்றவர் விபத்தில் பலி. உறவினர்கள் சாலை மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் சுமார் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில், கடந்த 14 ஆம் தேதி ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் குழாயில் குருணை மருந்து கலந்ததால், அவரது குழந்தைகள் உட்பட பள்ளி மாணவர்கள் என பலர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், அக்கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் குடிநீர் குழாயை சரி செய்வதற்காக செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலை விபத்தில் சிக்கினார்.
அதையடுத்து, அவரை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு சென்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியனின் உறவினர்கள் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க கோரியும், சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும், விபத்து அதிகமாக நடக்கும் சாலையில் வேகத்தடை அமைக்க கோரியும், விருத்தாச்சலம்- ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் நான்கு கிலோ மீட்டர் வரை இருபுறங்களிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலைந்து செல்ல மறுத்தனர். அதன் பின்பு விருத்தாச்சலம் தாசில்தார் கவியரசு தலைமையில் பாண்டியனின் உறவினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையில் விபத்தை ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருங்காலங்களில் இந்த சாலையில் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.