Skip to main content

கூடுதல் வாக்குச்சாவடி அலுவலர் வேண்டும்- ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்...

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

 தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் 1.97 லட்சம் பெண்கள் உட்பட 3.29 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதில் வாக்கு பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர். இதில் வாக்குப்பதிவு அலுவலர் 2ன் பணிகள் அதிகமாக இருப்பதால் வாக்காளர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே வாக்குப்பதிவு அலுவலர் 2ன் பணிச்சுமையை குறைக்கவும், வாக்குப்பதிவு விரைவாக நடைபெறவும் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு அலுவலரை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.

 

Need additional Polling Officer

 

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு.சத்தியபிரதா சாஹூ மற்றும் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ஜெயகாந்தன் அவர்களுக்கு  அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது;
 

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சவாடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2 மற்றும் 3, அதிகம் வாக்காளர் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக வாக்குப்பதிவு அலுவலர் 2 நியமனம் செய்யப்பட்டு முதல்கட்ட பயிற்சி கடந்த மார்ச் 30-ம் தேதி முடிந்துள்ளது. அடுத்தகட்ட பயிற்சிகள் ஏப்ரல் மாதம் 5, 13 மற்றும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் வாக்குப்பதிவு அலுவலர் 2ன் பணி மற்ற அலுவலர்களின் பணிகளை விட மிக அதிகமாக உள்ளது. அதாவது 17(அ) பதிவேடு பராமரித்தல், அழியாத மை வைத்தல், வாக்காளர் ரசீதில் கையொப்பமிட்டு வழங்குதல் என பல்வேறு பணிகளை செய்யவேண்டியுள்ளது. 


    
குறிப்பாக 17(அ) பதிவேடு மிக முக்கியமான பதிவேடு என்பதால் அதில் வாக்காளர் வாக்களிக்கப் பயன்படுத்தும் அடையாள அட்டையின் எண்னை எழுதுவதோடு, வாக்காளரிடம் கையொப்பமும் பெறவேண்டும். 17(அ) பதிவேடு சட்டப்பூர்வமான மிகமிக முக்கிய ஆவணம் என்பதால் பதிவுகள் விடுதலின்றி துல்லியமாகவும், அடித்தல் திருத்தலின்றி பதிவு செய்தல் வேண்டும். அதன் பின் அழியாத மையை விரலில் வைத்துவிட்டு வாக்காளர் ரசீதில் விபரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்க வேண்டும். இறுதியில் வாக்காளர் வாக்களிக்க விருப்பம் இல்லையென்றால் அதற்கான பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும். இவையனைத்தும் ஒரே அலுவலர் மேற்கொள்வதால் காலதாமதம் ஆவதோடு அதிக பணிச்சுமையும் ஏற்படுகிறது. இதனால் அலுவலர் வெகு சீக்கிரமே களைப்படைவதோடு வாக்காளர்களும் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும். 

 

Need additional Polling Officer

 

வாக்குச்சீட்டு நடைமுறை உள்ள தேர்தல்களில் அழியாத மை வைப்பதற்கு தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டார். வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்த பின்னால்தான் அழியாத மை வைக்கும் பணி கூடுதலாக வாக்குப்பதிவு அலுவலர் 2 இடம் ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது வெப்பம் அதிகமாக உள்ளதாலும், 100 சதவீத வாக்குப்பதிவை முழுமையாக நிறைவேற்றவும் வாக்குப்பதிவு அலுவலர் 2ன் பணிகளை பகிர்ந்துகொள்ள அழியாத மை வைக்க கூடுதலாக வாக்குப்பதிவு அலுவலரை நியமனம் செய்ய வேண்டுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்